செய்திகள்

கோட்டக்குப்பத்தில் பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் கைது

கோட்டக்குப்பத்தில் பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

சேதராப்பட்டு:

சென்னை பாடியை சேர்ந்தவர் லட்சுமிபதி. இவரது மகள் கோகிலா (வயது 17). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவரை அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (22) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். மேலும் கோகிலாவிடம் காதலிக்க சொல்லி அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார்.

இதனால் கோகிலாவை அவரது பெற்றோர் புதுவையை அடுத்துள்ள சின்ன கோட்டகுப்பத்தில் உறவினர் சிங்காரி என்பவர் வீட்டில் தங்க வைத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சிங்காரி வீட்டில் இருந்த கோகிலாவை இளையராஜா மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று விட்டார்.

இதுகுறித்து கோகிலாவின் தந்தை லட்சுமிபதி கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோகிலாவை இளையராஜா கடத்தி சென்று மேல்மருவத்தூர் பகுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இன்று அதிகாலை கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோகிலாவை மீட்டு இளையராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.