செய்திகள்

பேட்டையில் அண்ணன் முகத்தில் மண்ணை தூவி கல்லூரி மாணவி கடத்தல்

பேட்டையில் கல்லூரி மாணவியை காதலன் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.

நெல்லை:

நெல்லை டவுண் கண்டியப்பேரி பகுதியை சேர்ந்தவர் செல்வி(பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பழையபேட்டை காந்திநகர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் சுப்புக்கும் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இடையே காதல் இருந்து வந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு காதல் ஜோடி ஊரைவிட்டு ஓட்டம் பிடித்தது. பின்னர் செல்வியின் வீட்டார் அவரை மீட்டு கல்லூரியில் படிக்க வைத்தனர். தினமும் செல்வியை அவரது அண்ணன் மோட்டார்சைக்கிளில் கல்லூரியில் கொண்டு விடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதியம் செல்வியை அவரது அண்ணன் கல்லூரியில் கொண்டு விட சென்றார்.

அப்போது செல்வியின் காதலன் சுப்பு அங்கு வந்தார். அவர் திடீரென செல்வியின் அண்ணன் முகத்தில் மண்ணை தூவினார். இதனால் மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியது. இந்த வேளையில் சுப்பு அங்கு தயார் நிலையில் நின்ற மற்றொரு மோட்டார் சைக்கிளில் செல்வியை கடத்தி சென்றார்.

இதுபற்றி பேட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.