பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் அரசங்காடு பகுதியை சேர்ந்தவர் சுடலை ராஜா(வயது 24). பெயிண்டர். இவரது மகள் மகாலட்சுமி(வயது 3).
சுடலைராஜாவின் மனைவி கருத்து வேறு பாடு ஏற்பட்டு தனியாக சென்று விட்டார். இதையடுத்து சுடலை ராஜா தனது மகள் மகாலட்சுமி மற்றும் தந்தை மாரியப்பன் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார்.
குழந்தையை தனியாக கவனிக்க முடியாததால் சுடலைராஜா அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் மகாலட்சுமியை சேர்த்து விட்டார்.
இந்த நிலையில் சுடலை ராஜாவின் தந்தை மாரியப்பன் பேத்தியை பார்க்க வேண்டும் என்றார். இதையடுத்து சுடலை ராஜா மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் மாரியப்பன் அயர்ந்து தூங்கி விட்டார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த சுடலைராஜா மகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.
இதுகுறித்து சுடலை ராஜா பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்த போது சுடலை ராஜா வீட்டில் இருந்து ஒரு இளம்பெண் குழந்தையுடன் செல்வது பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல் உத்தரவின் பேரில், பல்லடம் டி.எஸ்.பி. முருகவேல் மேற்பார்வையில் பல்லடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் குழந்தையை கடத்தி கொண்டு மாயமான இளம்பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இளம்பெண் ஓருவர் குழந்தையுடன் ஈரோடு போலீசில் சிக்கி இருப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அது காணாமல் போன குழந்தை மகாலட்சுமி என்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணையும் கைது செய்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், மாரியப்பன் தனது பேத்தி மகாலட்சுமியுடன் பழனி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது மாரியப்பனிடம் சேலத்தை சேர்ந்த அல்போன்ஸ் மேரி(30) என்பவர் வந்து பேசியுள்ளார்.
அப்போது அல்போன்ஸ் மேரி தான் தனியாக இருப்பதாகவும், தன்னுடன் நீங்கள் வந்து விடுங்கள் என்றும் மாரியப்பனிடம் கூறியுள்ளார்.
அதற்கு மாரியப்பன் நாங்களும் எங்கள் பேத்தியுடன் தனியாக வசித்து வருகிறோம். வேண்டும் என்றால் நீ எங்களுடன் வந்து விடு என்று கூறியுள்ளார். அதன்படி அந்த பெண்ணும், கடந்த சில நாட்களுக்கு முன் பல்லடத்திற்கு வந்து அவர்களுடன் வசித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாரியப்பன் போதையில் அயர்ந்து தூங்கி விட்டார். இதையடுத்து அல்போன்ஸ் மேரி குழந்தை மகாலட்சுமியை கடத்தி கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.
அவர் குழந்தையை அழைத்து கொண்டு நேராக வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளார். அப்போது தந்தையை தேடி குழந்தை அழுதுள்ளது. இதையடுத்து அல்போன்ஸ் மேரி குழந்தை மகாலட்சுமியை மீண்டும் பல்லடத்திற்கு அழைத்து வருவதற்காக ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது குழந்தை காணவில்லை என போலீசார் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர். இவர்களை பார்த்த பொதுமக்கள் அல்போன்ஸ் மேரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தது விசாரணையில் தெரியவந்தது.