செய்திகள்

காலிஸ்தானுக்கு ஆதரவாக பஞ்சாப்பில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்ட 4 பேர் கைது

காலிஸ்தானுக்கு ஆதரவாக பஞ்சாப்பில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சண்டிகார்:

பஞ்சாப் மாநிலத்தில் 1980-ம் ஆண்டு வாக்கில் காலிஸ்தான் தீவிரவாதிகள் பெரிய இயக்கமாக செயல் பட்டு வந்தனர்.

அவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி முக்கிய தலைவர்களை கொன்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. இதனால் அவர்கள் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்.

ஆனாலும், இந்த இயக்கத்தின ஆதரவாளர்கள் கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தொடர்ந்து செயல் பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் காலிஸ்தானுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டது போலீசுக்கு தெரிய வந்தது.

அவர்கள் பேஸ்-புக் மற்றும் பல்வேறு சமூக வலைத்தளம் மூலமாக இளைஞர்களை ஒருங்கிணைத்து வந்தனர். பாகிஸ்தான், அரபு நாடுகள் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த சீக்கிய இளைஞர்கள் பலர் இதில் இணைந்து இருந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏராளமான சீக்கிய இளைஞர்களும் இதில் இணைந்து கருத்து பரிமாற்றங்களை செய்து கொண்டனர். அவர்கள் பஞ்சாப்பில் தாக்குதல் நடத்துவதற்கும் திட்டமிட்டு இருந்தனர். குண்டு வெடிப்பு நடத்துவது, முக்கிய தலைவர்களை கொல்வது போன்றவை அவர்களின் திட்டமாக இருந்தன.

கடந்த 26-ந் தேதி பதின்டா மாவட்டத்தில் இதில் தொடர்புடைய 5 பேரை கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இதில் முக்கிய பங்கு வகிக்கும் நபர்களின் விவரம் தெரிய வந்தது.

அதையடுத்து ஹர்பரீந் தர்சிங், ஜர்னேல்சிங், ரந்தீப்சிங், அமிர்த்பால் கவுர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களில்2 பேர் மொகாலியிலும், 2 பேர் லூதியானாவிலும் பதுங்கி இருந்த போது போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களிடம் இருந்து 2 கை துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்திரா காந்தி கொலையை அடுத்து டெல்லியில் நடந்த சீக்கியர் மீதான தாக்குதலுக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்கள் ஜெகதீஷ் டைட்லர், சா‌ஷன்குமார் ஆகியோரையும் அவர்கள் கொல்ல சதித்திட்டம் தீட்டி இருந்ததும் தெரிய வந்துள்ளது.