திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது முதல்-மந்திரியாக உம்மன் சாண்டி இருந்தார். அப்போது தொழிற்சாலைகள், வீடுகளுக்கு சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை பொருத்தி கொடுக்கும் பணி தொழில் அதிபர்களான பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சரிதாநாயர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அவர்கள் இருவரும் தொழில் அதிபர்கள் உள்பட பலரிடமும் சோலார் பேனல் பொருத்தி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு அதை பொருத்தி கொடுக்காமல் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அவரது மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கில் சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணை கமிஷனை 2013-ம் ஆண்டு நியமித்து உம்மன்சாண்டி உத்தரவிட்டார்.
அடுத்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை பிடித்தது. சோலார் பேனல் மோசடி புகாரே காங்கிரசின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் சோலார் பேனல் மோசடி பற்றி விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான விசாரணை கமிஷன் தனது அறிக்கையை கடந்த மாதம் 26-ந்தேதி முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கை 1,073 பக்கங்களில் இருந்தது. 214 சாட்சிகளிடம் விசாரணை செய்ததன் மூலம் கிடைத்த 812 ஆதாரங்களும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்த விசாரணை கமிஷன் அறிக்கையை அரசு இதுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில் நேற்று பினராயி விஜயன் தலைமையில் கேரள மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் சோலார் பேனல் மோசடி வழக்கில் விசாரணை கமிஷன் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி மற்றும் இதில் தொடர்புடைய முன்னாள் மந்திரிகள், அவர்களுக்கு உதவிய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் சரிதாநாயர் தன்னை பலரும் கற்பழித்ததாகவும் குற்றம் சாட்டி இருந்தார். அது தொடர்பான பெயர் பட்டியலையும் அவர், வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்க மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மந்திரிசபை கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி கேரள அரசு இந்த விவகாரத்தில் தனது அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.
முதல் கட்டமாக 6 கேரள போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் சூப்பிரண்டாக உள்ள அஜித், ரெஜி ஜேக்கப், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுதர்சன், ஜெய்சன், இன்ஸ்பெக்டர் ராய், சப்-இன்ஸ்பெக்டர் பிஜு ஜாண் ஜேக்கப் ஆகியோர் தாங்கள் தற்போது வகிக்கும் பதவியில் இருந்து உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் சோலார் பேனல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களை காப்பாற்ற முயற்சி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக அப்போதைய உள்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை மந்திரி திருவஞ்சியூர் ராதாகிருஷ்ணன், மின்சாரத் துறை மந்திரி ஆரியாடன் முகம்மது ஆகிய 2 பேர் மீது விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சோலார் பேனல் வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், சாட்சிகளை கலைக்க துணை புரிந்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் சோலார் பேனல் மோசடி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.