செய்திகள்

சோலார் பேனல் ஊழல்: பிளாக்மெயில் வழக்கில் உம்மன் சாண்டியிடம் போலீஸ் விசாரணை

சோலார் பேனல் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பிளாக்மெயில் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் சோலார் பேனல் பதித்துத் தருவதாகக் கூறி மக்களிடம் பல கோடிகள் வசூலித்ததாக பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் சரிதா நாயர் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதில், கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தன. இந்த வழக்கில் சரிதா நாயர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

சோலார் பேனல் திட்டத்துக்காக முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.1.60 கோடி லஞ்சம் கொடுத்ததாக பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் குருவில்லா தெரிவித்திருந்தார்.

ஆனால், சோலார் பேனல் திட்டம் செயல்படுத்தப்படாததால் பணம் கேட்டு குருவில்லா முதல்வர் உம்மன்சாண்டி உள்ளிட்ட 6 பேர் மீது 2015-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குருவில்லாவுக்கு 12 சதவீத வட்டியுடன் ரூ.1.60 கோடியை 6 பேரும் திருப்பி அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உம்மன்சாண்டி தரப்பில் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாட்டீல் மோகன்குமார் பீமனகவுடா, உம்மன்சாண்டிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை விடுவித்தார். அதேசமயம், மற்ற 5 பேர் மீதான விசாரணை தொடரும் என தீர்ப்பளித்தார். ஆனால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில் உம்மன்சாண்டி உள்ளிட்ட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உம்மன் சாண்டி, சோலார் பேனல் ஊழல் விவகாரத்தில் தனக்கு மிரட்டல் வந்ததாக கூறினார்.  ஊழலில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூற வேண்டும் என மர்ம நபர் பிளாக்மெயில் செய்ததாகவும் உம்மன்சாண்டி கூறினார்.

இதையடுத்து பா.ஜ.க. தலைவர் கே.சுரேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த முடிவு செய்து சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் கடந்த திங்கட்கிழமை உம்மன்சாண்டியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அவரின் வாக்குமூலத்தை பதிவுசெய்தனர்.