செய்திகள்

‘தினத்தந்தி’ பவள விழா: கேரள கவர்னர் பி.சதாசிவம் வாழ்த்து

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரலை இப்போதுபோல, எதிர்காலத்திலும் தொடர்ந்து வெளிப்படுத்தும் வெற்றிக்குரிய நாளிதழாக ‘தினத்தந்தி’ திகழவேண்டும் என்று கேரள கவர்னர் பி.சதாசிவம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

கேரள கவர்னரும், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியுமான பி.சதாசிவம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையான ‘தினத்தந்தி’, தன்னுடைய பவள விழாவினை கொண்டாடுவதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். 1942-ம் ஆண்டு சி.பா.ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட ‘தினத்தந்தி’யின் வரலாறு என்பது, மக்களின் நம்பிக்கையை பெற்று, அதன் மூலம் ஒரு நிலையான வளர்ச்சியையும், மக்கள் மத்தியில் பிரபலத்தையும் ஒரு நாளிதழ் எப்படி அடையவேண்டும்? என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

நடுநிலையான செய்திகள், அதனை வழங்கும் விதத்தின் மூலமாக எல்லா தரப்பு மக்களிடையேயும் நம்பிக்கையை பெற்று ‘தினத்தந்தி’ திகழ்கிறது. சமூகநீதி, மேம்பாடு, பின்தங்கிய மக்களை முன்னேற்றம் அடைய செய்யும் மிகப்பெரிய பங்களிப்பினையும் ஏற்படுத்தி வருகிறது. பவள விழா கொண்டாடும் நன்னாளில் ‘தினத்தந்தி’யின் நிர்வாகம், செய்திப்பிரிவு மற்றும் பிற ஊழியர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரலை இப்போதுபோல, எதிர்காலத்திலும் தொடர்ந்து வெளிப்படுத்தும் வெற்றிக்குரிய நாளிதழாக ‘தினத்தந்தி’ திகழவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.