செய்திகள்

ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசிடம் கேரள முதல் மந்திரி வலியுறுத்தல்

மத்திய அரசு ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

மத்திய அரசு ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

குமரி மாவட்டத்தை புரட்டிப்போட்ட ஒக்கி புயல் திருவனந்தபுரத்தை நோக்கி நகர்ந்து சென்றதால் கேரளாவிலும் கடும் பாதிப்பை அந்த புயல் ஏற்படுத்தி உள்ளது. இதனால் திருவனந்தபுரம், கொச்சி, பத்தனம்திட்டா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதனால் கேரளாவில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து 62 படகுகளிலும், பூத்துறையில் இருந்து 28 படகுகளிலும், கொச்சியில் இருந்து 200 படகுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்தனர். கடலில் சிக்கி மாயமான மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், ஒக்கி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், ஒக்கி புயலால் கேரளா மாநிலத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து தலைமை செயலாளர் அறிக்கை தயாரித்து வருகிறார். அந்த அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் அளிக்க உள்ளோம்.

எனவே, மத்திய அரசு ஒக்கி புயல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.