சென்குமார் 
செய்திகள்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்த சென்குமாரை நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்க கேரள அரசு முடிவு

கேரள அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்த முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சென்குமாரை அம்மாநிலத்தின் நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்க முடிவு செய்துள்ள கேரள அரசு இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் சென்குமார்.

அங்கு மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் சென்குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்குமார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது வழக்கை விசாரித்த கோர்ட்டு, சென்குமாருக்கு மீண்டும் டி.ஜி.பி. பொறுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், கேரள அரசு சென்குமாரை மீண்டும் டி.ஜி.பி. ஆக நியமிக்கவில்லை. எனவே அவர் கேரள அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் சென்குமாரை நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் நிர்வாக தீர்ப்பாய உறுப்பினர் பதவியில் 2 இடங்கள் காலியானது. இந்த பதவியை பெற 20 அதிகாரிகள் விண்ணப்பித்தனர். இவர்களில் சென்குமார் மற்றும் சோமசுந்தரம் ஆகியோரின் பெயர்கள் உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் இடம் பெற்றது.

கடந்த அக்டோபர் மாதம் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனால் அது கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்படவில்லை. கிடப்பில் போடப்பட்டது.

தற்போது கேரள அரசு மீது சென்குமார் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவரை நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்கும் பரிந்துரையை கேரள அரசு கவர்னருக்கு அனுப்பி உள்ளது. இது குறித்து கவர்னர், மத்திய அரசுக்கு தகவல் தெரிவிப்பார். பிரதமர் தலைமையிலான நியமனக்குழு இதனை ஏற்றுக்கொண்டால் அவர்கள் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார்கள். ஜனாதிபதி அனுமதி அளித்ததும், பதவி நியமனம் அமலுக்கு வரும்.

இந்த பொறுப்பில் நியமிக்கப்படுபவர்கள் 6 ஆண்டுகள் உறுப்பினராக இருக்கலாம். இதன் மூலம் சென்குமாரால் ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வருமென கேரள அரசு கருதுகிறது.