செய்திகள்

அரசு பஸ்சில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி

அரசு பஸ்சில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியுடன் மற்ற பயணிகள் கை குலுக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மிகவும் எளிமையான அரசியல் தலைவர் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் முதல்-அமைச்சர் பதவியில் இருந்தபோதும் பதவி இல்லாதபோதும் எளிமையாகவே காணப்படுவார்.

உம்மன்சாண்டிக்கு பெரிய அளவில் சொத்துக்களும் கிடையாது. இதனால் அவர் தனது சொந்த பயணங்களுக்கு அரசு பஸ் மற்றும் ரெயிலையே பயன்படுத்தி வருகிறார். பொதுமக்களோடு சாதாரண வகுப்பிலேயே ரெயிலில் பயணம் செய்வார்.

இந்த நிலையில் நேற்று உம்மன்சாண்டி தனது சொந்த வேலை காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயத்திற்கு ரெயில் மூலம் சென்றார். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு கேரள அரசு பஸ் மூலம் மீண்டும் திருவனந்தபுரம் புறப்பட்டார்.

அந்த பஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்ற பிறகு தான் மற்ற பயணிகள் தங்களோடு முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியும் பயணம் செய்வதை உணர்ந்தனர். உடனே அவரிடம் கை குலுக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சில பயணிகள் உம்மன் சாண்டியோடு செல்பியும் எடுத்துக்கொண்டனர். அனைத்து பயணிகளிடமும் சிரித்தபடி பேசிய உம்மன் சாண்டியின் எளிமை அனைவரையும் கவர்ந்தது. #tamilnews