கேரள முன்னாள் முதல்-மந்திரியும் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமானவர் அச்சுதானந்தன் (வயது 96).
திருவனந்தபுரத்தில் வசித்து வரும் அச்சுதானந்தன் சமீபத்தில்தான் தனது குடும்பத்தினருடன் தனது 96-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீசித்திரைத் திருநாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது மூளையில் சிறிய அளவில் ரத்த கசிவு ஏற்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து அச்சுதானந்தனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, அச்சுதானந்தனுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.
அவரது நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருப்பதால் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது. அவரது உடல்நலம் கருதி யாரும் நேரில் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றனர்.
அச்சுதானந்தன் அனுமதிக்கப்பட்டு உள்ள ஆஸ்பத்திரியில் அவரது மனைவி மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தங்கி இருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.