ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி நடைபெற்ற காட்சி. 
செய்திகள்

கேரளா வெள்ள பாதிப்பு- மீட்பு பணிக்கான ஹெலிகாப்டர் வாடகையாக ரூ.290 கோடி கேட்கும் மத்திய அரசு

கேரளாவை நிலைகுலைய வைத்த வெள்ள பாதிப்பின் போது மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் வாடகையாக மத்திய அரசு ரூ.290 கோடியை கேட்பதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods

மாலை மலர்

கேரளாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்தது.

கேரளாவில் வெள்ளத்தில் தவித்த மக்களை மீட்க முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டது. குறிப்பாக விமானப் படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் மக்களை துரிதமாக மீட்பதில் பெரும் உதவியாக இருந்தது.

வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கேரள வெள்ள பாதிப்பு குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தகவல்களை தெரிவித்தார். அவர் பேசும் போது கூறியதாவது:-

மீட்புப்பணியின் போது 56 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது. திருவனந்தபுரம், கோவை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தூரத்தை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 1 மணி நேரம் ஹெலிகாப்டர் பறக்க ரூ.3 லட்சம் செலவாகிறது. பெரிய ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதற்கு இதை விட கூடுதல் கட்டணம் ஆகும்.