விசித்திர நோய் தாக்கிய மனைவி குழந்தைகளுடன் தந்தை ஷாஜன். 
செய்திகள்

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு வினோத நோய்

கேரளாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாரத்தோடு 28-வது மைல் என்ற இடத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஷாஜன் (வயது 34). இவரது மனைவி ஜான்சி (31). இவர்களுக்கு செமிலின் (14), அலன் (13) என்ற மகன்களும், சிமின் (11) என்ற மகளும் உள்ளனர்.

மூத்தமகன் செமிலினுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பேசமுடியும், கேட்க முடியும், ஆனால் நடக்கவோ, நிற்கவோ முடியாது. சிறிய வேலையை கூட செய்யமுடியாத உடல்சோர்ந்து இருந்தது.

இதனையடுத்து அவரது பெற்றோர் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அங்கு செமிலினை தாக்கிய நோய் என்ன என்று கண்டறிய முடியவில்லை என்று கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுமாறு கூறினர்.

அங்கு செமிலினின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் என்ன நோய் என்று கண்டறிய முடியாமல் திணறினர். ஆனால் ஆஸ்பத்திரியில் வைத்து கடந்த 4 வருடங்களாக பராமரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தாய் ஜான்சி, மகன் அலன், மகள் சிமின் ஆகியோருக்கும் அடுத்தடுத்து அதே மர்மநோய் தாக்கியது. 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனையடுத்து அவரது கணவர் 4 பேரையும் எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு மாதம் ஒருவருக்கு ரூ. 4 ஆயிரம் மருந்து, மாத்திரைக்கு செலவு ஆகிறது. 4 பேருக்கும் ரூ.16 ஆயிரம் செலவாகிறது. கூலிவேலைக்கு செல்லும் தன்னால் மருத்துவச்செலவு செய்ய முடியவில்லை என்றும் தனக்கு உதவுமாறும் அரசுக்கும், சமூக நல அமைப்புக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கேரளாவில் பிரபல நரம்பியல் டாக்டர் முகமது கூறும்போது, அவர்களுக்கு தாக்கியிருக்கும் நோய் என்னவென்று கண்டு பிடிக்கும் வசதி இல்லை. ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு இந்த வினோத நோய் தாக்கியுள்ளது. அவரது குடும்பத்தலைவர் ஷாஜனுக்கும் தாக்காது என்று உறுதியாக கூறுவதற்கு இல்லை.

இவர்கள் 4 பேரையும் வேலூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டால் ஒருவேளை கண்டறிய வாய்ப்புள்ளது என்றார். இதன்படி விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட உள்ளனர். #Tamilnews