செய்திகள்

மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசு உத்தரவுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றுவோம் - கேரள முதல்வர்

மாட்டு இறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றுவோம் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

மாலை மலர்

மாடுகளை இறைச்சிக்காக கால்நடை சந்தைகளில் விற்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கேரளாவில் இந்த உத்தரவை கண்டித்து ஆளுங் கட்சியான கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பொது இடத்தில் மாட்டிறைச்சி விருந்து நடத்தி அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் அனைத்து மாநில முதல்-மந்திரிகளின் ஆதரவை கேட்டும் அவர், கடிதம் எழுதி உள்ளார்.

இந்த நிலையில் மந்திரி சபை கூட்டத்தை கூட்டி முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு எதிர்க்கட்சியினருடனும் அவர், ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பினராயி விஜயன் கூறியதாவது:-

மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காக அனைத்து முதல்- மந்திரிகளின் ஆதரவையும் திரட்ட நான் கடிதம் எழுதி உள்ளேன். அனைவரும் ஒருங்கிணைந்து இதை தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் ஜனநாயகத்திற்கு எதிரான இதுபோன்ற உத்தரவுகளை மத்திய அரசு தொடர்ந்து பிறப்பிக்க நேரிடும்.

கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடுக்கும் சட்டத்தை இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. சில மாநிலங்கள் பசுவதை தடுப்பு சட்டத்தை நிறைவேற்றியதும், சில மாநிலங்கள் அந்த சட்டத்தை இயற்றாமல் இருப்பதற்கும் இதுதான் காரணம்.

இந்தியாவிலேயே கேரளாவில் உள்ளவர்கள்தான் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள். அதற்கு மாட்டிறைச்சி உண்பதும், ஒரு காரணம். ஒரு வருடத்தில் கேரளாவிற்கு 15 லட்சம் கால்நடைகள் வருகின்றன. 2.5 லட்சம் டன் மாட்டிறைச்சி கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே மத்திய அரசின் உத்தரவு கேரளாவிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றுவோம். இதுபற்றி ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவருடன் கலந்து பேசி, விரைவில் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டவும் தீர்மானித்துள்ளோம். மேலும் இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டிலோ, சுப்ரீம் கோர்ட்டிலோ வழக்கு தாக்கல் செய்வது பற்றி ஆலோசித்து வருகிறோம்.

விரைவில் திருவனந்தபுரத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்டவும், முடிவு செய்துள்ளோம்.