செய்திகள்

கேரள பட்ஜெட்: ஒக்கி புயல் நிவாரண நிதியாக ரூ. 2000 கோடி ஒதுக்கீடு

கேரளா மாநிலத்தில் ஒக்கி புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட் உரையில் அம்மாநில நிதி மந்திரி அறிவித்துள்ளார். #OckhiCyclone #KeralaBudget2018

மாலை மலர்

திருவனந்தபுரம்:

2018-ம் நிதியாண்டுக்கான கேரள மாநில பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. கேரளா மாநில நிதி மந்திரி தாமஸ்ஐசக் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கேரள மாநிலம் ஒக்கி புயலால் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. இதில் இருந்து மீனவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு வானிலை குறித்து எச்சரிக்கை வழங்க சேட்டிலைட் போன் வசதி ஏற்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடலில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள வீடுகளை மாற்றி பாதுகாப்பான இடங்களில் வீடு வழங்க ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதியில் பாதிப்படைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒக்கி புயல் நிவாரண நிதியாக மொத்தம் ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  

மேலும் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் பிரிவு தொடங்கப்படும். பொது கல்விக்கு ரூ. 970 கோடி ஒதுக்கப்படுகிறது. வீடு இல்லாத 4.21 லட்சம் பேருக்கு தலா ரூ. 4 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுக்கப்படும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் இதய சிகிச்சை பிரிவு தொடங்கப்படும்.

பெண்கள் மேம்பாட்டிற்கு ரூ. 50 கோடியும், கேரளாவில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் நலனுக்காக ரூ. 50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுபானமாக பீருக்கு 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகளுக்கும் பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தாமஸ்ஐசக் தெரிவித்தார். #OckhiCyclone #KeralaBudget2018 #tamilnews