செய்திகள்

கென்யா ஜனாதிபதி தேர்தலில் கென்யாட்டா வெற்றி முகம்: எதிர்க்கட்சியினர் வன்முறை-போலீஸ் துப்பாக்கி சூடு

கென்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கென்யாட்டா வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாலை மலர்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஜனாதிபதி பதவிக்கு 8 பேர் போட்டியிட்டனர். எனினும் தற்போதைய ஜனாதிபதியான உஹூரு கென்யாட்டா (55), முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (72) ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவியது. வன்முறை ஏற்படலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

ஆனால், தேர்தல் ஆணைய கம்ப்யூட்டர்கள் மற்றும் அதில் உள்ள தரவுகளை ஹேக்கர்கள் முடக்கிவிட்டதாகவும், இது மிகப்பெரிய வாக்கு மோசடிக்கு வழிவகுத்திருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடிங்கா குற்றம்சாட்டினார். இதனால் அவரது ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தொண்டர்களை அமைதி காக்கும்படி ஒடிங்கா கேட்டுக்கொண்டார். அதேசமயம், மக்களை தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறி ஆதரவாளர்களை உசுப்பேற்றி விட்டார். இதையடுத்து ஒடிங்காவின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கினர்.

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. துவக்கத்தில் இருந்தே ஜனாதிபதி கென்யாட்டா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றதால், அவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதனால் ஒடிங்காவின் ஆதரவாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஒடிங்காவின் கோட்டையாக கருதப்படும் கிசுமு நகரில் ஏராளமானோர் திரண்டு கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘ஒடிங்கா இல்லையென்றால் அமைதி இல்லை’ என்று முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.