கே.சி. பழனிசாமி 
செய்திகள்

கட்சியில் இருந்து நீக்கியதாக எனக்கு கடிதம் வரவில்லை- கே.சி. பழனிசாமி

அதிமுக கட்சியில் இருந்து நீக்கியதாக எழுத்துபூர்வமாக கடிதம் கொடுக்கப்படவில்லை என்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கே.சி. பழனிசாமி கூறியுள்ளார்.

திருப்பூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கே.சி. பழனிசாமி. கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் எம்.எல்.ஏ.வாகவும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எம்.பி.யாகவும் இருந்தார். கே.சி. பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.

நீக்கப்பட்ட சில நாட்களில் அவர் மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப்பட்டதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. இதை அ.தி.மு.க. தலைமை மறுத்தது. கே.சி.பழனிசாமியை மீண்டும் கட்சியில் சேர்க்கவில்லை என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் கே.சி. பழனிசாமி தனியாக இணையதளம் தொடங்கி அதில் தன்னை அ.தி.மு.க.வில் தொடர்ந்து இருப்பது போல் காண்பித்து வந்ததாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வின் லட்டர் பேடு, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றுடன் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் என்பவர் சூலூர் போலீசில் கே.சி. பழனிசாமி மீது புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் 11 பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த மாதம் 25-ந்தேதி கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் இருந்த கே.சி.பழனிசாமியை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கே.சி.பழனிசாமி தனக்கு ஜாமீன் கேட்டு சூலூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து அவருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன்தாரர்கள் நேற்று சூலூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தியதை தொடர்ந்து நேற்று மாலை நீதிபதி வேடியப்பன் ஜாமீன் உத்தரவை வழங்கினார். இரவு நேரமாகிவிட்டதால் நேற்று அவர் சிறையில் இருந்து வெளியே வரவில்லை.

இதையடுத்து இன்று காலை கே.சி.பழனிசாமி கோவை சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

எனக்கு நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஒரு நாள் கழிந்தபின்னர் தான் வெளியே வந்துள்ளேன்.

இதுவரை என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதாக எழுத்துபூர்வமாக கடிதம் கொடுக்கப்படவில்லை.

சிறை வைத்தது என்னை அல்ல. எம்.ஜி.ஆர், ,ஜெயலலிதா கொள்கைகளை சிறை வைத்தனர்.

என்னை நீக்கியதாக என் விலாசத்திற்கு கடிதம் அனுப்பியதற்கு ஆதாரம் அ.தி.மு.க.விடம் இருக்கின்றதா?

என்னை கைது செய்யும் போது , என் வீட்டிற்குள் பத்திரிகையாளர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். நான் என்றைக்கும் அ.தி.மு.க.தான்.வேறு கட்சிக்கு நான் ஒருபோதும் செல்ல மாட்டேன்.

100 முறை என்னை சிறை வைத்தாலும் நான் அ.தி.மு.க.தான். முன்பை விட அதிக உத்வேகத்துடன் வழக்குகளை நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.