செய்திகள்

அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க சமாதான பேச்சு நடக்கிறது- கே.சி.பழனிசாமி

அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க என்னிடம் சமாதான பேச்சுவார்த்தை நடக்கிறது என்று முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

அ.தி.மு.க.வில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவி, இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்ற 2 பதவிகள் உள்ளன. இதை தேர்தல் கமி‌ஷன் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்கு இது முரணானது. விதிகளில் செய்த திருத்தங்களை தேர்தல் கமி‌ஷன் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏனென்றால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக பொதுக்குழுவில் திருத்தங்களை செய்துள்ளனர்.

கட்சியில் பொதுச்செயலாளர் பதவிதான் அதிகாரம் கொண்டது. பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுக்குழுவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியாது.


மேலும் பொதுச்செயலாளருக்கு உரிய அதிகாரத்தை ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் பங்கிட்டு கொள்ள முடியாது. இதுதான் தற்போதைய நிலையாக உள்ளது. அதனால் தேர்தல் கமி‌ஷன் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல் உள்ளது.

அ.தி.மு.க.வை பொறுத்த வரை பொதுச்செயலாளர் பதவி இருந்தால்தான் கட்சியை சிறப்பாக வழி நடத்தி செல்ல முடியும். கட்டுக்கோப்பாகவும் இருக்கும். இதைத்தான் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்புகிறார்கள்.

ஆரம்ப காலம் முதல் கட்சிக்காக உழைத்தவன் நான். என்னை திடீரென கட்சியை விட்டு நீக்குகிறார்கள். தீர ஆலோசிக்காமல் அவசரப்பட்டு என் மீது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இப்போது மீண்டும் கட்சியில் சேர்க்க என்னிடம் சமாதான பேச்சு நடத்துகிறார்கள்.