செய்திகள்

தாக்குதலை தொடங்கியது ‘அக்னி’ வெயில்

கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்து வரும் நிலையில் அதன் உச்சக்கட்டமான அக்னி வெயில் இன்று தொடங்கியது. இன்னும் 25 நாட்களுக்கு சூரியனின் உக்கிர தாண்டவம்தான்.

மாலை மலர்

கோடை காலம் என்று பொதுவாக சொன்னாலும் அதில் கொடிய காலம் அக்னி நட்சத்திர காலம்.

ஏற்கனவே கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்து வரும் நிலையில் அதன் உச்சக்கட்டமான அக்னி வெயில் இன்று தொடங்கியது. இன்னும் 25 நாட்களுக்கு சூரியனின் உக்கிர தாண்டவம்தான்.

சித்திரை மாதம் 21-ந் தேதி முதல் வைகாசி மாதம் 14-ந் தேதி வரை ‘அக்னி நட்சத்திரம்’ என்று சொல்வார்கள்.

இந்த கால கட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வயல் வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன் வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும்.

அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டு விடும். இதனை “கர்ப்ப ஓட்டம்‘ என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்று விடுகிறது. ஆனால் இன்றைய கால நிலையும், சூழ்நிலையும் வேறுவிதமாக இருக்கிறது.


இதுபற்றி புராணம் கூறும் தகவல் சுவாரஸ்யமானது. யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்துவளர, அவ்வப்போது மழை பெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன்.

இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக் கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும், அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர்.

அவர்கள் கரையேறும் போது ஓர் அந்தணர் கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து, “எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்‘’ என்று வேண்டினார்.


வந்திருப்பது அக்னி தேவன் என கண்டு கொண்டதும், “நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே’’ என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தை கலைத்தார் அக்னி தேவன்.

துர்வாச முனிவர் யாகத்தால் மந்த நோய் தாக்கி உள்ளது. அது நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன.

“நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்தரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்து விடுகிறான்’’ என்றான்.

கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். (காண்டவ வனத்தை அழித்தே அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள். ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு என்று திகைத்த வேளையில் இது நடந்தது)

கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்து கொண்ட அர்ச்சுனன் “அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம் ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத்தூணியும் அம்புகளும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை’’ என்றான்.


உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில், அம்புகள், அம்பாறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான்.

அப்பொழுது கண்ணன், “அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக் கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழை பொழியாமல் பார்த்துக் கொள்கிறோம்‘’ என்றார்.

அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான்.

இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காள மேகத்திற்கு உத்தரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க “சரக்கூடு’ ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.

இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.

இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். தான தர்மங்கள் செய்யலாம், தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம், நோயாளிகளுக்கு இளநீர் தரலாம், உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம், ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்.

நவீன விஞ்ஞானமும் இந்த கால கட்டத்தில் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கிறது. அக்னி நட்சத்திர காலத்தில் வழி மண்டலத்தில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் அதாவது மின்காந்த ஒளி அலைகள் ஆற்றல் மிக்கது.

வழக்கமாக புற ஊதா கதிர்களை ஓசோன் படலம் தடுக்கும். ஆனால் இந்த கால கட்டத்தில் வெளியிடும் கதிர்கள் ஆற்றல் மிக்கதாக இருப்பதால் ஓசோன் மண்டலத்தால் தடுக்க முடியாது.