செய்திகள்

கதிராமங்கலம் போராட்டம்: சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் ஜெயராமனுக்கு ஜாமீன்

கதிராமங்கலம் போராட்டத்தில் ஓ.என்.ஜி.சி. சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் ஜெயராமனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது.

மாலை மலர்

மதுரை:

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இக்கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் போராட்டத்தின்போது ஓ.என்.ஜி.சி. சொத்துக்களை சேதப்படுத்தியதாக பந்த நல்லூர் காவல் நிலையத்தில் ஓ.என்.ஜி.சி. மேலாளர் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில் பந்தநல்லூர் காவல்துறையினர் பேராசிரியர் ஜெயராமனை கைது செய்தனர். பேராசிரியர் ஜெயராமன் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி பேராசிரியர் ஜெயராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி பாரதி தாசன் விசாரித்து ஜெயராமனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் 30-ந் தேதி, கதிராமங்கலத்தின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டகாரர்களால் காவல்துறையினர் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக வழக்கில் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே ஜெயராமன் ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றாலும், தற்போது சிறையிலிருந்து வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.