கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.நிறுவனத்தினர் எண்ணை குழாய் பதித்து அங்கிருந்து எண்ணை எடுத்து குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வருகிறார்கள். இந்த குழாய் பதித்து பல ஆண்டுகள் ஆனதால் சமீபத்தில் புதிய குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
த.மா.கா.தலைவர் ஜி.கே. வாசன், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கதிராமங்கலம் சென்று பொதுமக்களிடம் கருத்து கேட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை ஓ.என்.ஜி.சி. பதித்திருந்த பழைய குழாய்களில் இருந்து எண்ணை கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கதிராமங்கலத்தை விட்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.