கோப்பு படம். 
செய்திகள்

காசிமேடு மீனவர்கள் 10 பேர் மாயம்: 50 நாட்களாக கண்ணீரில் மிதக்கும் மீனவ குடும்பங்கள்

காசிமேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 பேர் கரைக்கு திரும்ப வில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாததால் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

ராயபுரம்:

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி 10 மீனவர்கள் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

டிரைவர் குமார் படகை ஓட்டிச் சென்றார். ஒரு வாரம் வரையில் கடலுக்குள் தங்கி இருந்து மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்ப 10 பேரும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் திட்டமிட்டப்படி மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாததால் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுபற்றி ஜூலை 27-ந்தேதியே காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

மீனவர்களை கண்டு பிடித்து தரக்கோரி அவர்களது குடும்பத்தினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று அவர்களை சமாதானப்படுத்தி அனைவரையும் கண்டுபிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உறுதியளித்தார்.

கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மீனவர்கள் காணாமல் போய் 50 நாட்களை நெருங்குகிறது. இன்றுடன் 49 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இதுவரையில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் 10 மீனவர்களின் குடும்பத்தினரும் ஒவ்வொரு நாளும் அவர்களை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தினமும் கண்ணீர் வடித்தப்படி காலம் தள்ளி வரும் மீனவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அரசும் பல்வேறு வழிகளில் மீனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. ஆனால் படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவி செயலிழந்து விட்டதால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த விவகாரம் பற்றி தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், ஜூலை 28-ந்தேதி விசைப்படகில் இருந்த வாக்கிடாக்கி சிக்னல் கிடைத்ததாக வேறு படகைச் சேர்ந்தவர்கள் மீன்வளத்துறை உதவி அலுவலகத்தில் தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆந்திரலீ, ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் உள்ள கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினரும் 20 கப்பல்களில் மீனவர்களை தேடி வருகிறார்கள்.

ஆனால் அதில் எந்த முன் னேற்றமும் ஏற்படவில்லை. இதுபற்றி மீன்வளத்துறையினர் உரிய தகவல்களை அளிக்க மறுப்பதாகவும் அந்த சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

வங்கதேசம் மற்றும் மியான்மர் தூதரகங்களை தொடர்பு கொண்டு காணாமல் போன மீனவர்கள் பற்றிய தகவலை சேகரிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியுறவுத்துறைக்கு உரிய அழுத்தத்தையும் கோரிக்கையும் மீனவர்கள் முன் வைத்துள்ளனர்.