ஜம்மு:
காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் காவல்துறை பாதுகாப்பு சாவடி மீது கடந்த 8-ந்தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிர் இழந்தார். மற்றொரு அதிகாரி காயம் அடைந்தார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை கண்டறிவதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அப்துல் ரஷீத் என்பவரை இந்த குழு கைது செய்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து பாதுகாப்பு சாவடி மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டார்.
இதன் அடிப்படையில் சவுகத் அலி, அக்தர் மகரி, பஷீர் அகமது, அல்தாப் அகமது, ஷப்கத் உசேன், ஹபீஸ் ஆகியோரையும் கைது செய்தனர். கைதான 7 பேரும் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். இதில் பஷீர் அகமது முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது உறவினரான அல்தாப் போலீசாராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் அனைவரும் காஷ்மீரின் செனாப் பள்ளத் தாக்கில் வசித்து வரும் இளைஞர்களை மூளை சலவை செய்து லஷ்கர் அமைப்பில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.