செய்திகள்

ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் ஜி.எஸ்.டி மசோதா பெரும் போராட்டத்திற்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.

மாலை மலர்

நாடுமுழுவதும் கடந்த முதல் தேதி ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது, காஷ்மீர் சட்டசபையில் அம்மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்ததால், அங்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தவில்லை. இந்நிலையில், நேற்று கூடிய அம்மாநில சட்டசபையில் ஜி.எஸ்.டி குறித்த விவாதங்கள் தொடங்கின.

விவாதத்தின் தொடக்கத்திலேயே எதிர்க்கட்சிகள் இம்மசோதாவை ஏற்க முடியாது என அமளியில் ஈடுபட்டனர். சிறு வணிகர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த மசோதாவை அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் கூச்சல் எழுப்பினர். இதனால், நேற்று இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அவை தொடங்கியதும் நிதி மந்திரி மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கிடையே சபாநாயகர் கவிந்தர் குப்தா வாக்கெடுப்பை நடத்தினார். இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.