செய்திகள்

கஸ்கஞ்ச் கலவரத்தில் பலியானவர் குடும்பத்துக்கு 20 லட்சம் நிதியுதவி: யோகி ஆதித்யநாத்

உத்திரப்பிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானவர் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

லக்னோ:

உத்திரப்பிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானவர் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

குடியரசு தினத்தன்று மதுரா - பரேலி நெடுஞ்சாலையில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பினரும் பேரணி சென்றனர்.

கஸ்கஞ்ச் பகுதியின் வழியாக பேரணி சென்றபோது அவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் சந்தன் குப்தா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அங்குள்ள கடைகள், பேருந்துக்கு தீ வைத்ததை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, கலவரத்தில் பலியானவரின் உறவினர்கள் 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், கஸ்கஞ்ச் கலவரத்தில் பலியான சந்தன் குப்தா குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.