செய்திகள்

காஸ்கஞ்ச் வன்முறை சம்பவம் மாநில அரசுக்கு அவமானம்: உ.பி கவர்னர் ராம்நாயக் பேட்டி

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் வன்முறை நிகழ்வுகள் மாநில அரசுக்கு அவமானம் எனவும், அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மாநில கவர்னர் ராம்நாயம் பேட்டியளித்துள்ளார். #KasganjViolence

மாலை மலர்

லக்னோ:

குடியரசு தினத்தன்று விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி அமைப்புகள் இணைந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் நகரில், திரங்கா என்ற பெயரில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தின. பேரணியின் போது ஒரு தரப்பினர், கற்களை வீசியதாகச் சொல்லப்படுகிறது. பதிலுக்கு பேரணியில் ஈடுபட்டவர்களும் கற்களை வீசித் தாக்க, சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சரமாரியாக சுட்டுள்ளனர்.

இதில் சந்தன் குப்தா என்ற இளைஞர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞர் உயிரிழந்தை அடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் வன்முறை மூண்டது. கடைகளை அடித்து நொறுக்கிய வன்முறைக் கும்பல், சாலையில் இருந்த பொருட்களையும் சூறையாடி தீ வைத்தனர். சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டன.

இதை அடுத்து வன்முறை நடந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, மேலும் வன்முறை பரவாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கப்பட்டனர். அம்மாவட்ட போலீஸ் எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த கலவரம் தொடர்பாக பேட்டியளித்துள்ள அம்மாநில கவர்னர் ராம்நாயக் மாநில அரசின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார். நடந்த வன்முறை சம்பவம் மாநிலத்தின் மீதான கறை என்று குறிப்பிட்ட அவர், மாநில அரசு விரைவாக வன்முறையை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

இதற்கிடையே, வன்முறை தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது. #TamilNews