லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காஸ்கஞ்ச் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட சந்தன்குப்தா கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் நகரில் குடியரசு தினத்தன்று விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி. உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து, ‘திரங்கா யாத்ரா’ என்ற பெயரில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தின. இந்த பேரணியின் மீது ஒருதரப்பினர், கற்களை வீசினர். பதிலுக்கு பேரணியில் சென்றவர்களும் கற்களை வீசித் தாக்க, சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சரமாரியாக சுட்டனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் பேரணியில் வந்த சந்தன் குப்தா என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய குற்றவாளி சலீம் என்பவரை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர்.
மேலும், காஸ்கஞ்ச் கலவரத்தில் இறந்த சந்தன் குப்தா குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காஸ்கஞ்ச் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சந்தன் குப்தா கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய காஸ்கஞ்ச் பகுதியை சேர்ந்த சல்மான் என்பவரை கைது செய்துள்ளோம். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் அதற்கான குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சந்தன் குப்தா குடும்பத்தினர் தலைநகர் லக்னோவில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.