80 வயது முடி திருத்தும் தொழிலாளி 
செய்திகள்

விராட் கோலி கட்டிங் - சிகை அலங்காரத்தில் அசத்தி வரும் 80 வயது முடி திருத்தும் தொழிலாளி

கரூர் வேலாயுதம்பாளையம் அருகே 80 வயது முடி திருத்தும் தொழிலாளி விராட் கோலி கட்டிங் செய்து சிகை அலங்காரத்தில் அசத்தி வருகிறார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 80). இவர் பள்ளி பருவ நாட்களிலேயே தந்தையை இழந்தார். படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அவர் குடும்பத்தை காப்பாற்ற மாமாவின் சலூன் கடையில் வேலைக்கு சேர்ந்தார். 1960-ம் ஆண்டு தனது 19-வது வயதில் சொந்த முயற்சியால் புதிய கடையை தொடங்கினார்.

தற்போது 80 வயதை தொட்ட போதிலும் தடையின்றி சென்று கொண்டிருப்பதாக கூறினார். இந்த வயதிலும் தனது சிகையலங்கார திறமையால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார். தற்போது நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் ஆகியோரை போன்று முடி திருத்திக் கொள்வது நாகரீகமாக கருதப்படுகிறது. அந்த வகையில் தங்கவேல், கிரிக்கெட் வீரர் விராட் கோலியை போன்று முடி வெட்டி விடுகிறார். இதனால் அவரது கடைக்கு ஏராளமானோர் படையெடுத்து வருகிறார்கள். இதுபற்றி அவர் கூறியதாவது:-

60 ஆண்டுகளாக முடி திருத்தும் தொழில் செய்து வரும் நான் இதுவரை எனது கடையை பூட்டியதே இல்லை. முதன்முறையாக கொரோனா ஊரடங்கால் கடையை 60 நாட்களாக பூட்டியிருந்தேன். தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டதால் மீண்டும் கடையை திறந்து தொழில் செய்து வருகிறேன்.

இந்த 60 நாட்கள் கடை அடைக்கப்பட்டாலும் எனது தொழில் ஆர்வம் குறையவில்லை. கடையில் கிருமி நாசினியாக மஞ்சள் நீர் தெளித்து, வேப்பிலையை பயன்படுத்துகிறேன். கிரிக்கெட் வீரர் விராட் கோலி கட்டிங்கிற்கு இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 80 வயது ஆனாலும் இதுவரை எனக்கு தொழிலில் கைநடுக்கம் ஏற்பட்டது கிடையாது. இறுதி மூச்சு உள்ள வரை இந்த தொழிலை ஈடுபாட்டுடன் செய்வேன். எனக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.