செய்திகள்

கரூர் பகுதியில் மணல் கடத்திய 14 லாரிகள் சிறைபிடிப்பு: டிரைவர்கள்-பொதுமக்கள் மோதல்

கரூர் பகுதியில் மணல் கடத்திய 14 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் லாரி டிரைவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கரூர்:

கரூர் பகுதியில் மணல் குவாரிகள் செயல்பட ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் கரூரில் மணல் குவாரிகள் செயல்படவில்லை. இந்நிலையில் பல இடங்களில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டுத்தனமாக அள்ளப்பட்டு ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு பின்னர் லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன.

இன்று காலை கரூர் அருகேயுள்ள வாங்கலில் மணல் குவிக்கப்பட்டு 8 லாரிகளில் ஏற்றப்பட்டு மண்மங்கலம் பெரிய வடுகபட்டி வழியாக சென்றது. இதை அறிந்த பொது மக்கள் அங்கு சென்று லாரிகளை வழிமறித்து சிறை பிடித்தனர். இதனால் லாரி டிரைவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

இது குறித்து தகவல் அறந்ததும் மண்மங்கலம் தாசில்தார் ராம்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். தாசில்தார் மணல் கடத்திய 8 லாரிகளை பறிமுதல் செய்தார்.

இதேபோல் நெரூர் அருகே சித்தகாட்டு புத்தூரில் மணல் ஏற்றி வந்த 6 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.