செய்திகள்

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும்: கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி

கதிராமங்கலம் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கதிராமங்கலத்தில் வயல்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய்கள் பதித்து கச்சா எண்ணை எடுத்து வருகிறது. இந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கதிராமங்கலத்தில் பாதிப்பு பகுதிகளை பார்வையிட எம்.எல்.ஏ.க்கள் திருவாடானை தொகுதி கருணாஸ், நாகை தமிமுன்அன்சாரி, காங்கேயம் தனியரசு ஆகியோர் கும்பகோணம் வந்தனர்.

அவர்கள் கதிராமங்கலம் புறப்படும் முன்பாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது;

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பணிகள் தொடங்கியபோது அப்பகுதி மக்களிடம் இதுகுறித்து எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. அவர்களை ஏமாற்றி அங்கு கச்சா எண்ணை எடுத்து வருகின்றனர். தற்போதுதான் அப்பகுதி மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவன பணிகளால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை உணர்ந்துள்ளனர்.

இதனால் அவர்கள் போராடி வருகின்றனர். இதுநாள் வரை மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களின் உயிரை உறிஞ்சி வருகின்றனர். தற்போது அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் உணர்வுகளை மதித்து உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அங்கிருந்து வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து 3 பேரும் கதிராமங்கலம் சென்று பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

SCROLL FOR NEXT