செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் லஞ்சம் - ஊழல் பெருகிவிட்டது: கருணாஸ் எம்.எல்.ஏ. பாய்ச்சல்

அ.தி.மு.க. ஆட்சியில் லஞ்சம் - ஊழல் பெருகிவிட்டது என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

மாலை மலர்

சென்னை:

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்று முதல்வரும், அமைச்சர்களும் கூறுகிறார்கள். அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. இது ஜெயலலிதாவுக்கு களங்கம் உருவாக்கும் ஆட்சியாக உள்ளது.

கல்விக்கொள்கை, சமூக நீதி திட்டங்கள், சிறுபான்மையினர் ஆதரவு, மாநில உரிமை எதிலும் ஜெயலலிதாவின் கொள்கைகளை கடைபிடிக்கவில்லை. மத்திய அரசு சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

அமைச்சர்களும், அமைச்சர்களின் உறவினர்களும் தான் இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டு காலத்தில் எந்த உருப்படியான திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. எல்லாவற்றுக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர்.

கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சென்றால் யார் ஆள் என்பதை பொறுத்துதான் வேலை நடக்கிறது. சத்துணவு ஆயா வேலைக்கு கூட ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள். இதை இனிமேலும் சகித்துக் கொள்ள கூடாது என்பதற்காக இப்போது வெளிப்படையாக சொல்கிறேன்.

இந்த ஆட்சி இனி மேலும் தொடர்வதில் எம்.எல்.ஏ.வான எனக்கு விருப்பம் இல்லை. எனவே மக்களை நேரடியாக சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளேன். இரட்டை இலை சின்னத்தில் நிற்க மறைந்த முதல்வர் அம்மா எனக்கு வாய்ப்பளித்தார். அந்த வாய்ப்பை உருவாக்கி தந்தவர் சின்னம்மா, அந்த விசுவாசம் எனக்கு உள்ளது.

ஊழலை ஒழிப்பேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் தமிழ்நாட்டில் ஊழல் அரசாங்கத்துக்கு மத்திய அரசு துணை போகிறது.

இந்த ஊழல் அரசு நீடிப்பது வாக்களித்த தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம். இப்போது முதலாவதாக நான் வெளிப்படையாக பேசத் தொடங்கி உள்ளேன். இனி ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் பேசத் தொடங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.