புதுவை முதலமைச்சர் நாராயணசாமி 
செய்திகள்

புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் நீக்கம் - நாராயணசாமியுடன் தி.மு.க.வினர் வாக்குவாதம்

அமைச்சரவையில் எடுத்த முடிவின் படி புறவழிச்சாலைக்கு டாக்டர் கலைஞர் புறவழி சாலைஎன ஏன் பெயர் சூட்டவில்லை என நாராயணசாமியுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு நாள் சுற்று பயணமாக காரைக்காலுக்கு சென்றார்.

காரைக்கால் மாவட்டத்தில் அவர் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார். இதில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள காரைக்கால் மேற்கு புறவழிசாலை திறப்பு விழாவில் அவர் பங்கேற்று புறவழி சாலையை திறந்து வைத்தார்.

அப்போது காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். அவர்கள் மேடையில் இருந்த முதல்- அமைச்சர் நாராயணசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவையில் எடுத்த முடிவின் படி புறவழிச்சாலைக்கு டாக்டர் கலைஞர் புறவழி சாலைஎன ஏன் பெயர் சூட்டவில்லை என கேள்வி எழுப்பினர்.

திறப்பு விழா அழைப்பிதழில் கூட மேற்கு புறவழி சாலை என்று மட்டும் தான் இடம்பெற்றுள்ளது என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் சாலைக்கு அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் கூட கலைஞர் பெயர் இடம் பெறவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி அவர்களை சமாதானம் செய்தார். காரைக்கால் மாவட்ட கலெக்டரை (பொறுப்பு) அழைத்து 2 நாட்களுக்குள் சாலையின் பெயர் பலகையில் டாக்டர் கலைஞர் மேற்கு புறவழிசாலை என்ற பெயரை எழுதும்படி முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து தி.மு.க.வினர் அங்கிருந்து வெளியேறினர்.