செய்திகள்

சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

நடிகர் சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது.  இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. சிவாஜி மணிமண்டபத்தை  (அக்டோபர்) 1-ந்தேதி துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிவாஜி சிலை கிரீடத்தில், கருணாநிதி பெயர் அடங்கியிருந்த கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றம். அரசியல் விளையாட்டுகளால் மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துள்ளார் முதல்-அமைச்சர். சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றப்பட்டது திரையுலகத்தையும், சிவாஜியின் ரசிகர்களையும் அவமானப்படுத்தும் செயல். சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகளையும், சிவாஜி மற்றும் கருணாநிதிக்கு செய்யும் துரோகத்தையும் தமிழ் திரையுலகம் மன்னிக்காது.

SCROLL FOR NEXT