சென்னை:
காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் படப்பை சாலமங்கலத்தில் அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் நடந்தது.
குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் விசுவநாதன், அன்புச் செழியன், காமராஜ், சேகர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் மற்றும் அவரது சட்டமன்ற வைர விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் நிர்வாகிகளுடன் விவாதித்தார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறை வேற்றப்பட்டன. அவை வருமாறு:-
* தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி சரித்திர சாதனை படைத்ததற்காக வைர விழா காணும் அவருக்கு ஜூன் 3 பிறந்த நாளன்று காஞ்சி வடக்கு மாவட்டம் முழுவதும் 2257 கிளைகளிலும் கழக கொடி ஏற்றி, பாடல்களை ஒலிபரப்பி இனிப்பு வழங்கி கோலாகல விழாவாக கொண்டாடுவது என்று முடிவெடுக்கிறது.
* ஜூன் 3-ந்தேதியன்று அன்னதானம், மருத்துவ முகாம், கண்சிகிச்சை நடத்துவது, மரக்கன்று நடுதல், வேட்டி-சேலை, நோட்டு புத்தகம் வழங்க ஏற்பாடு செய்தல்.
* காஞ்சி வடக்கு மாவட்டத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை தொடர் பொதுக் கூட்டங்கள், பட்டி மன்றம் நடத்துவது.
* செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஜூன் 3-ந்தேதி பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிப்பது.
* ஜூன் 3 அன்று கருணாநிதியின் பாராட்டு விழாவில் திரளாக பங்கேற்பது, ஏரி, குளங்களை தூர்வாரும் பணியில் தீவிரமாக ஈடுபடுவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வைத்திய லிங்கம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் மற்றும் தமிழ்மணி, து.மூர்த்தி, எம்.கே.தண்டபாணி, ஜெ.சண்முகம், பாபு, வே.கருணாநிதி, ப.ரவி, பாபு, எம்.பி.மூர்த்தி, ரஞ்சன், ஜெயக்குமார், சத்தியமூர்த்தி, கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.