புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் 6 நாள் விசாரணைக்காவல் முடிந்து இன்று பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி அவருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
5 நாள் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த வழக்கில் மிகப்பெரிய சதி ஒழிந்துள்ளதாகவும் சி.பி.ஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தஷ்கர் மேஹ்தா வாதிட்டார். மேலும், அதிகாரிகளின் கேள்விக்கு கார்த்தி சரியான பதிலை அளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மிக முக்கியமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன எனவே, கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 9 நாட்கள் கோர்ட் அவகாசம் வழங்க வேண்டும் என தஷ்கர் மேஹ்தா கோரிக்கை விடுத்தார்.
அரசுத்தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த அபிஷேக் சிங்வி, கார்த்தி சிதம்பரத்தை எப்படியாவது விசாரணைக் காவலில் அடைத்திட சி.பி.ஐ முயற்சிக்கிறது. அவர் விசாரணைக்கு தயாராகவே உள்ளார். ஆனால், சி.பி.ஐ விரும்பும் வாக்குமூலத்தை கார்த்தி அளிக்கமாட்டார் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாலை 5 மணியளவில் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிபதி அனுமதியளித்தார்.
கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரனை 9-ம் தேதி விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் மூன்றாவது முறையாக கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. #KartiChidambram #INXMediaCase #CBI #TamilNews