புதுடெல்லி:
ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது நடைபெற்ற ஏர்செல் மேக்சிஸ் முறைகேட்டில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.
ஆனால் கார்த்தி சிதம்பரம் நேற்று சி.பி.ஐ. முன் ஆஜராகவில்லை. அவர் தனது வக்கீல் மூலம் சி.பி.ஐ.க்கு பதில் அனுப்பியுள்ளார். இந்த பதில் சி.பி.ஐ.க்கு நேற்று காலை 10.30 மணிக்கு கூரியர் தபால் மூலம் கிடைத்தது. இதுதவிர பேக்ஸ், இமெயில் மூலமும் பதில் அனுப்பப்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் அருண் நடராஜன் தெரிவித்தார்.
அதில், இந்த பிரச்சினையில் தனிக்கோர்ட்டு குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்துவிட்டது. இந்த வழக்கின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு, விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட பின்னர், இதுதொடர்பாக சம்மன் அனுப்ப சி.பி.ஐ.க்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.