செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணை கர்நாடக அரசு பிறப்பித்தது

ரூ.8,165 கோடி விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக கர்நாடக அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது.

மாலை மலர்

கர்நாடகத்தில் வறட்சி நிலவுவதால் விவசாய கடனை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 13 நாட்களாக நடந்தது. இந்த கூட்டத்தொடரின் இறுதிநாளான கடந்த 21-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா ரூ.8,165 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து அறிவித்தார்.

இதுபற்றி சட்டசபையில் முதல்-மந்திரி சித்தராமையா பேசுகையில், ‘கடந்த 20-ந் தேதி வரை நிலுவையில் உள்ள குறுகிய கால விவசாய கடனில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கு உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்படும். இந்த கடன் தள்ளுபடியால் கர்நாடக அரசுக்கு ரூ.8,165 கோடி நிதிச்சுமை ஏற்படும். இதன்மூலம் மாநிலத்தில் 22 லட்சத்துக்கு 27 ஆயிரத்து 506 விவசாயிகள் பயன்பெறுவார்கள்‘ என்றார்.

சித்தராமையாவின் இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றனர். இனிப்பு வழங்கியும் விவசாயிகள் கொண்டாடினர். இருப்பினும், விவசாய கடன் தள்ளுபடியை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மாநில அரசுக்கு, பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

அதேப் போல் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.