பெங்களூரு:
முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான கர்நாடக மந்திரி சபையில் மின்சாரத்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவரது வீடு, அலுவலகங்கள் உள்பட 64 இடங்களில் கடந்த 2-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை வருமானவரி சோதனை நடந்தது. அப்போது ரூ.11.43 கோடி ரொக்கம், ரூ.4.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இத்துடன், டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறார்கள்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் தங்க நகைகள், முதலீடுகள், ரொக்கம் மற்றும் சொத்துகள் என ரூ.100 கோடி சொத்துகள் டி.கே.சிவக்குமாரின் பெயரில் இருப்பதாகவும், மீதமுள்ள ரூ.200 கோடி அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், குடும்பத்தினர், உறவினர்களின் பெயர்களில் இருப்பதாகவும் கூறப்படுகின்றன.
முதற்கட்ட ஆவணங்களின் பரிசீலனையில் மட்டுமே கணக்கில் காட்டாத ரூ.300 கோடி சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து பரிசீலனை நடைபெறுவதால் கணக்கில் காட்டாத சொத்துகளின் மதிப்பு மேலும் உயரும் எனவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்த விசாரணைக்கு இன்று (திங்கட்கிழமை) ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் வழங்கியுள்ளது. மேலும் அவருடைய மாமனார் திம்மையா, சகோதரி பத்மா, நண்பர்கள் துவாரகநாத், சச்சின் நாராயண் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே அவர் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் கேட்டபோது, “வருமான வரித்துறை சோதனையை கண்டு நான் பயப்படவில்லை. வருமான வரித்துறையிடம் இருந்து சம்மன் வந்துள்ளது. விசாரணைக்கு நான் கண்டிப்பாக ஆஜராகி, அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு சட்டப்படி பதிலளிக்க தயாராக இருக்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று கூறினார்.
இதன் மூலம் அவர் இன்று விசாரணைக்காக வருமானவரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராவார் என்று தெரிகிறது.
இந்த சொத்துகள் தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறையிடம் வருமான வரித்துறை வழங்கும் என்று சொல்லப்படுகிறது. சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு வருமான வரித்துறையிடம் இருந்து விசாரணை கைமாறும் பட்சத்தில் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலிலும், காங்கிரஸ் கட்சியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே மந்திரி டி.கே.சிவக்குமாரை நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மகளிர் காங்கிரஸ் தலைவி லட்சுமி ஹெப்பால்கர், மந்திரிகள் எம்.பி.பட்டீல், கே.ஜே.ஜார்ஜ், ரோஷன் பெய்க், மேயர் பத்மாவதி மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்த சந்திப்பு பெங்களூரு சதாசிவநகரில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டில் நடந்தது.