ஆதரவாளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்ட கர்நாடக மந்திரி டி.கே.சிவகுமார். 
செய்திகள்

மைசூருவில் உள்ள கர்நாடக மந்திரி டி.கே. சிவக்குமார், மாமனார் வீட்டில் 2-வது நாளாக சோதனை

கர்நாடக மின்சாரத் துறை மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலங்களில் இன்று 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.

மாலை மலர்

பெங்களூரு:

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேருக்கு பெங்களூரு சொகுசு விடுதியில் அடைக்கலம் கொடுத்த கர்நாடக மின்சாரத் துறை மந்திரி டி.கே.சிவக்குமார் வீட்டிலும், அவரது உறவினர்கள், நண்பர்கள், அரசியல் குரு, ஜோதிடர், ஆலோசகர்கள், உதவியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான பெங்களூரு சதாசிவ நகர் மற்றும் கெங்கேரியில் உள்ள வீடுகள், சொந்த ஊரான தொட்டஹள்ளியில் உள்ள அவரது வீடு, மேலும் அந்தப் பகுதியில் உள்ள அவரது 2 பங்களாக்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.

சிவக்குமாரின் சகோதரரும், எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் வீடு, அலுவலகம், டெல்லியில் உள்ள மந்திரியின் உதவியாளர் ஆஞ்சநேயா வீடு, சென்னையில் உள்ள மந்திரி வீடு, பெங்களூரு ஆர்.டி. நகரில் உள்ள அவரது குருநாதரும், ஜோதிடருமான துவாரகநாத் வீடு உள்பட மொத்தம் 64 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மைசூரு ஜூ கார்டன் அருகே இத்திகே கூடு பகுதியில் உள்ள மந்திரியின் மாமனார் திம்மையா வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது, இன்று 2-வது நாளாக அங்கும் சோதனை நீடிக்கிறது.

பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் 10 கோடி ரொக்கப்பணமும், ஏராளமான ஆவணங்களும் நகைகளும் சிக்கியது. சென்னை, டெல்லி, பெங்களூரு, மைசூரு, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மந்திரி தனது உறவினர்கள் பெயர்களில் செய்து இருந்த சொத்து முதலீடுகள் குறித்த ஆவணங்களும் சிக்கியது.

இதுகுறித்து மந்திரி சிவகுமாரிடம் விடிய- விடிய வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இன்று 2-வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருமான வரி சோதனையும் 2-வது நாளாக நீடிக்கிறது.

சோதனை நடந்த போது அவர் வீட்டு முன்பு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும், ஆதரவாளர்களும் குவிந்து விட்டனர். அவர்களை பொறுமையாக இருக்க வேண்டும் என்று அவர் வீட்டு மாடி மீது நின்று கேட்டுக்கொண்டார்.