செய்திகள்

நாட்டின் 2-வது தலைநகராக பெங்களூருவை அறிவிக்க வேண்டும் - பிரதமருக்கு கர்நாடக மந்திரி கடிதம்

இந்தியாவின் இரண்டாவது தலைநகராக பெங்களூருவை அறிவிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கர்நாடக மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே குறிப்பிட்டுள்ளார். #Bengaluru #SecondCapital

புதுடெல்லி:

கர்நாடகா மாநிலத்தின் தொழிற்சாலைகள் துறை மந்திரியான ஆர்.வி.தேஷ்பாண்டே பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் பெங்களூருவை நாட்டின் இரண்டாவது தலைநகராக அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியாவைப் போன்ற ஆளுமை, கட்டமைப்பு சீர்திருத்தங்கள், தேசிய புனரமைப்பு மற்றும் சர்வதேச பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு முன்மாதிரியான மற்றும் தீவிர மாற்றத்திற்காக திட்டங்களை முன்னெடுத்து செல்லும் ஒரு நாட்டை, ஒரு நகரில் இருந்து ஆட்சி செய்வது கடினமானதாகும். இந்தியாவுக்கு உடனடியாக இரண்டாவது தலைநகர் தேவை, அதற்கு பெங்களூரு சரியான இடமாக இருக்கும். இந்தியாவிலேயே அதிகபடியாக மென்பொருள் இஞ்ஜினியர்கள் மற்றும் மொழி கல்வியாளர்கள் பெங்களூருவில் தான் உள்ளனர். சர்வதேச அளவில் டெல்லியை அடுத்து அதிகபடியான மாணவர்கள் மற்றும் வெவ்வேறு மொழிகளை சேர்ந்தவர்கள் இங்கு தான் வசிக்கின்றனர். 

தென்னிந்தியாவில் அமைந்துள்ள பெங்களூரு நகரானது, இயற்கை பேரிடர்களால் அதிகஅளவில் பாதிப்புகளுக்கு ஆளானது கிடையாது. அதே சமயம் தட்பவெட்ப சூழல்களும் சரியாக இருக்கும். பெங்களூருவில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தை நடத்துதல், இரண்டாவது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அலுவலகம், இரண்டாவது சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை அமைக்கப்படுவதே நாம் சிந்திக்க வேண்டிய விசயங்களாகும்.

தென்னிந்தியாவில் ஒரு தலைநகர் அமைக்கப்படுவதன் மூலம் வர்த்தகம், கலாச்சார பரிமாற்றம், விஞ்ஞானம், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போன்றவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும். 

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #Bengaluru #SecondCapital #RVDeshpande #tamilnews

SCROLL FOR NEXT