பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கங்களின் செயல்பாடுகள் குறித்து லோக்ஆயுக்தா அமைப்பின் சிறப்பு புலனாய்வுகுழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜந்தகால் சுரங்க நிறுவனத்திடம் இருந்து குமாரசாமி ரூ.150 கோடி நன்கொடை பெற்றதாக பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக தன்னிடம் சி.டி. மற்றும் ஆவணங்கள் இருப்பதாக அவர் கூறி இருந்தார்.
இந்த சட்டவிரோத சுரங்க ஒப்பந்த வழக்கில் கர்நாடக வருவாய்த்துறை செயலாளராக இருந்த பதேரியாவை லோக்ஆயுக்தா சிறப்பு புலனாய்வுகுழு கடந்த மாதம் கைது செய்தது. இவர் குமாரசாமி முதல் மந்திரியாக இருந்தபோது சுரங்கத்துறை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து குமாரசாமியிடம் விசாரணை நடத்த லோக்ஆயுக்தா அமைப்பு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரியும், முன்ஜாமீன் வழங்கக் கோரியும் லோக்ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் குமாசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த முன்ஜாமீன் மனுவை நீதிபதி கோபால் தள்ளுபடி செய்தார். இதனால் எந்த நேரத்திலும் குமாரசாமி கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய குமாரசாமி முடிவு செய்து உள்ளார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து நான் கவலை அடையவில்லை. நான் தவறு எதுவும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் எந்த தவறான வழியிலும் செல்லவில்லை என்பதிலும் நம்பிக்கையோடு இருக்கிறேன். எனக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. நான் நிரபராதி என்பதை விரைவில் கோர்ட்டில் நிரூபிப்பேன்.
இந்த வழக்கில் அப்பீல் செய்ய இன்னும் உயர்நீதிமன்றம் உள்ளது. இந்த வழக்கு குறித்து சட்ட நிபுணர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
கர்நாடக சட்டபேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் என்னை குறிவைத்து கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.