கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.
இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் போட்டியிட்டனர்.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.
ராமநகரம் சட்டமன்றம் தொகுதியில் ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் அனிதா குமாரசாமி 1 லட்சத்து 09 ஆயிரத்து 137 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், ஜம்கண்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நியாமகவுடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 39 ஆயிரத்து 480 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல், மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை விட ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சிவராமெகவுடா 1 லட்சத்து 96 ஆயிரத்து 883 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், பெல்லாரி பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 1லட்சத்து 84 ஆயிரத்து 203 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஷிமோகா தொகுதியில் மட்டும் 36 ஆயிரத்து 467 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் ராகவேந்திரா முன்னிலையில் இருக்கிறார்.