செய்திகள்

தேர்தல் வரும்போதுதான் காங்கிரசுக்கு தலித் மக்களின் நினைவு வருகிறது: பிரதமர் மோடி தாக்கு

தேர்தல் வரும்போது தான் காங்கிரசுக்கு தலித் மக்கள் பற்றிய நினைவும் வருகிறது என்று நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்று ஒரே நேரத்தில் கர்நாடகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மோடி நேற்று 2-வது நாளாக வடகர்நாடகத்தில் உள்ள கலபுரகி, பல்லாரி, பெங்களூரு ஆகிய 3 நகரங்களில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். கலபுரகியில் நடந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

கர்நாடகத்தில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க எம்.எல்.ஏ.க்கள் இடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சித்தராமையா முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டதாக காங்கிரசார் அறிவித்தனர்.

ரகசிய வாக்கெடுப்பு என்ற பெயரில் தலித் சமூகத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க காங்கிரஸ் நிராகரித்தது. அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்காமல் செய்ததே காங்கிரஸ் தான்.

தேர்தல் வரும்போது தான் தலித்துகள் நினைவு காங்கிரசாருக்கு வருகிறது. ஆனால் ஆட்சியை நடத்தும் பொறுப்பை மட்டும் அவர்களுக்கு காங்கிரஸ் கொடுப்பது இல்லை. இந்த இரட்டை கொள்கையை காங்கிரஸ் பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வருகிறது. தலித்துகள் மீது மல்லிகார்ஜுன கார்கே அபாரமான அக்கறையும், நம்பிக்கையும் வைத்துள்ளார்.

ஆனால் மல்லிகார்ஜுன கார்கேயின் குடும்ப சொத்து எவ்வளவு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தலித்துகளின் வளர்ச்சி என்றால் இதுதானா? ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’(துல்லியமான தாக்குதல்) நடத்தி நமது ராணுவம், அண்டை நாடான பாகிஸ்தானுக்கு தக்க பாடத்தை புகட்டியது. ஆனால் இதற்கு ஆதாரம் எங்கே என்று காங்கிரஸ் கேட்டது. இதன் மூலம் நமது ராணுவ வீரர்களை காங்கிரஸ் அவமதித்துவிட்டது.

பீல்டு மார்ஷல் ஜெனரல் கரியப்பா, ஜெனரல் திம்மய்யா, உள்துறை மந்திரியாக பணியாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோருக்கும் காங்கிரஸ் அவமானத்தை இழைத்தது.

இவ்வாறு மோடி பேசினார்.

பல்லாரியில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

பா.ஜனதா தலித்துகள், பெண்களுக்கு எதிரான கட்சி என்று காங்கிரஸ் கூறுகிறது. தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நாங்கள் ஜனாதிபதி பதவியில் அமர்த்தியுள்ளோம். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை ராணுவ மந்திரியாக்கி இருக்கிறோம். தென் இந்தியாவை பா.ஜனதா கண்டுகொள்வது இல்லை என்று சொல்கிறார்கள். தென்இந்தியாவை சேர்ந்த வெங்கையா நாயுடுவுக்கு துணை ஜனாதிபதி பதவி கொடுத்துள்ளோம். அப்துல்கலாமை ஜனாதிபதியாக ஆக்கினோம்.

ஒரு சிறிய வேலைக்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேள்விப்பட்டேன். இந்த அரசு சித்தரூபய்யா அரசு. இந்த சித்தரூபய்யா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.”

இவ்வாறு மோடி பேசினார்.