செய்திகள்

காரைக்கால் அருகே தனியார் கம்பெனி ஊழியர் அடித்து கொலை- போலீசார் விசாரணை

காரைக்கால் அருகே தனியார் கம்பெனி ஊழியரை அடித்து கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

காரைக்கால்:

காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரி பாரதியார் வீதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தவர் இமானுவேல்ராஜா (வயது 26). இவரது பெற்றோர் இறந்து விட்டனர். அதனால் அவர் தனியாக வசித்து வந்தார்.

எம்.ஏ. படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்தார்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இமானுவேல்ராஜா கோட்டுச்சேரிக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கோட்டுச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு இமானுவேல்ராஜாவின் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் அவரது 2 கைகளும் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. உடல் அழுகி துர்நாற்றம் வீசியது.

யாரோ மர்ம மனிதர்கள் வீடு புகுந்து இமானுவேல்ராஜாவை அடித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் அவரது கைகளை கட்டி தூக்கில் உடலை தொங்க விட்டு சென்றுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து கொண்டு சிறிது தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

பின்னர் இமானுவேல் ராஜாவின் உடலை போலீசார் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, யாரோ மர்ம மனிதர்கள் இமானுவேல்ராஜாவை கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்க விட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன்தான் முழுவிவரம் தெரிய வரும். இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.