புதுடெல்லி:
புதிய காங்கிரஸ் தலைவர் குறித்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் காணொலி மூலம் பங்கேற்றுள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி பாஜவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டியதாக தகவல்கள் வெளியானது.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவிற்கு ஆதரவாக ஒரு கருத்து கூட கூறியதில்லை. ராஜஸ்தான் நீதிமன்றத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி கண்டோம் என்று கபில் சிபல் கூறினார்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என தான் கூறவில்லை என்று ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.
ராகுல் காந்தி விளக்கமளித்ததைத் தொடர்ந்து, அவர் மீதான தனது குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் திரும்பப் பெற்றார்.
பாஜகவுடன் தொடர்பு என ராகுல் காந்தி பேசவில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா மறுப்பு தெரிவித்துள்ளார்.