கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் மிஷன் காம்பவுண்டு பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இங்கு நேற்று மாலை பணி முடிந்து வங்கி மேலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் சென்று விட்டனர்.
அதன்பிறகு வங்கி பூட்டப்பட்டது. இன்று காலை வழக்கம்போல பணிக்கு வந்த வங்கி ஊழியர்கள் அந்த வங்கியில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வங்கி மேலாளர் ராமகிருஷ்ணன் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வங்கியின் மேல் மாடியில் உள்ள இரும்புக்கதவின் கம்பியை வளைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருப்பது தெரியவந்தது.
வங்கியில் இருந்த அலாரத்தை கொள்ளையர்கள் வெட்டி துண்டித்து எடுத்து அதை கழிவறையில் உள்ள தண்ணீர் வாளியில் போட்டுள்ளனர். மேலும் நகைகள், பணம் வைக்கப்பட்டுள்ள லாக்கர் அறையின் அருகே உள்ள அலாரத்தையும் அவர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் லாக்கரை திறக்க முயற்சித்த போது அவர்களால் அந்த அறையை திறக்க முடியவில்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் தப்பிச் சென்றுள்ளனர்.
அந்த வங்கியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்கு பதிவாகி உள்ள கைரேகைகளும் சேகரிக்கப்பட்டு உள்ளது.
லாக்கரை திறக்க முடியாததால் வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 கிலோ தங்க நகைகள் தப்பின. இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.