நாகர்கோவில்:
நாகர்கோவில், குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி உள்பட மாவட்டம் முழுவதும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
தலைமறைவு குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.
நேற்று தனிப்படை போலீசார் கோட்டார் பகுதியில் ரோந்து வரும்போது வாலிபர் ஒருவர் சந்தேக்கப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரைப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் குற்றவழக்கில் போலீசாரால் தேடப்படுபவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேப்போல் நேசமணி நகர், தக்கலை, கடையால்மூடு, தென்தாமரைகுளம், பூதப்பாண்டி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து வரும் போது பழைய குற்ற வழக்கில் தொடர்புடைய 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தலைமறைவு குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர்.
இதனால் தலைமறைவு குற்றவாளிகள் வெளியூரில் பதுங்கி உள்ளனர். தனிப்படையினர் இவர்களையும் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.