சென்னை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் இசக்கிமுத்து என்பவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்த சம்பவத்துக்கு பின்னர், பல இடங்களில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையிலும் கந்து வட்டி கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆயிரம் விளக்கு ரங்கூன் தெருவைச் சேர்ந்தவர் மெர்லிக். இவரது மனைவி அமுலு (38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை நேற்று இரவு அமலுவிடம் அந்த பெண் திருப்பி கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த அமுலு அருகில் உள்ள கூவத்தில் குதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அமலுவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் பிரச்சினை தொடர்பாக பணம் கொடுத்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.