செய்திகள்

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

ஒகி புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு, கடிதம் எழுதியுள்ளார்.

மாலை மலர்

ஒகி புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு, கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் மிகக்கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி இருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மீனவர்கள் அதிகளவு வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடிப்பு அதிகளவு நடைபெறுகிறது. அங்கு, 5 ஆயிரத்து 759 எந்திர படகுகளும், ஆயிரத்து 229 நாட்டு படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன.

அவற்றில், 600 எந்திர படகுகள் மூலமாக, பல நாட்கள் கடலிலேயே தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்யப்படுகிறது. புயல் உருவாவதற்கு முன்பாகவே, மேற்கு கடற்கரை பகுதிகளுக்குச் சென்ற மீனவர்கள் அங்கேயே தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு ஒகி புயல் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை கொண்டு சேர்க்க முடியவில்லை.

புயலால் பாதித்த மீனவர்களை தேடும் பணியில் இந்திய விமானப்படை, கடலோர காவல் படை, கடற்படை ஆகியன ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீனவர்களை தேடும் பணியிலும், மீட்புப்பணியிலும் நமது ராணுவப்படைகள் அளித்த ஆதரவும், சேவையும் மிகவும் பாராட்டத்தக்கது.

தமிழகத்தில் உள்ள முப்படை அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தினேன். அப்போது, கடைசி மீனவர் வரை அனைவரும் மீட்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அவர்களிடம் முன் வைத்தேன். அரபிக்கடல் பகுதி மற்றும் கன்னியாகுமரி, குஜராத், மாலத்தீவுகள் வரையில் மீனவர்களை தேடும் பணியில் முப்படையினரும் தொடர்ந்து ஈடுபட வேண்டுமென தாங்கள் ராணுவ அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.

கரை ஒதுங்கிய மீனவர்களுக்காக தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை கேரளா, கர்நாடகா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அளித்துள்ளன. இதற்காக, அந்த மாநிலங்களுக்கு தமிழக அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சார கட்டமைப்புகள், தோட்டக்கலை, பணப்பயிர்கள் உள்ளிட்ட விவசாயம், சாலைகள், மீனவர்களின் உள்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் வசதி என பலவும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

மேலும், கடுமையான பாதிப்புக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள போதிய நிதி உதவிகளையும் அளிக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்புவதற்குத் தேவையான அத்தனை உடனடி நடவடிக்கைகளையும் தமிழக அரசு முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. பாதிப்பு தொடர்பான விரிவான அறிக்கையையும் தயார் செய்து வருகிறது.

இதுதொடர்பான விரிவான கோரிக்கை மனு மத்திய அரசிடம் அளிக்கப்படும். இந்த இக்கட்டான தருணத்தில் தங்களது உடனடி உதவி எங்களுக்கு மிகவும் அவசியமாகிறது. மேலும் ஒகி புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.