நாகர்கோவில்:
குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட மகளிரணி-தொண்டரணி ஆய்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள குமரி மாவட்ட தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி பேசினார். எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், மகளிர் தொண்டரணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தலைவர் கருணாநிதியும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தொண்டர்களை சந்தித்து வருகிறார்கள். நினைத்த நேரத்தில் தலைவரை சந்திக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் தொண்டர்களை சந்திக்கிறார்கள். இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மட்டும் இந்த ஆட்சி மாற வேண்டும் என கூறவில்லை.
இன்று பெண்களின் பொருளாதாரம் குறைந்து விட்டது. மாநிலத்தின் உரிமைகள் விட்டுக்கொடுக்கப்படுகிறது. தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் போராட்டம் இல்லாத மாவட்டமே இல்லை. ஸ்டெர்லைட், மீத்தேன், காவிரி போராட்டங்களுக்கு பதிலே இல்லை. மக்கள் கோரிக்கைகளை ஒடுக்குவதில்தான் அரசு செயல்படுகிறது.
டாஸ்மாக்குக்கு எதிராக பெண்கள் போராடி வருகிறார்கள். கிராம மக்களுக்கு 100 நாள் வேலை கிடைக்க வேண்டும் என கொண்டு வந்த திட்டத்தில் கொள்ளையடிக்கிறார்கள். இதை வீட்டுகளிலும், தெருக்களிலும் மக்களிடம் கூற வேண்டும். மக்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது பொறுப்பில் இருக்கும் பெண்கள் சரிசெய்ய முன் வந்தால் அவர்கள் மனதில் தி.மு.க. கொள்கையை விதைக்க முடியும். தண்ணீர் வரவில்லை என்பது போன்ற பிரச்சினைகளுக்கு நாம் முன்நின்று போராட வேண்டும்.
தி.மு.க. வெற்றிக்கு அடிப்படை காரணமாக மகளிரணி இருக்க வேண்டும். தேர்தல் இன்று அல்லது நாளை வரலாம் 6 மாதம் கழித்து வரலாம். நாம் இப்போதே தேர்தல் பணிக்கு தயாராக வேண்டும் என்றார்.